Skip to main content

துபாயில் கணவனுக்கு உடல்நல பாதிப்பு... கணவனை மீட்க போராடும் மனைவி... 

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
Cuddalore District Tittakudi

 

துபாயில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வரும் கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வருகிறார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் 2007ஆம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு சார்ஜாவில் உள்ள ரான்ஜஸ் பில்டிங் கன்சக்சன் என்ற நிறுவனத்தில் கட்டுமான துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொபைலில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் அவர் போன் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர் வேலை செய்த கம்பெனியிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

 

இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் பாலகிருஷ்ணன் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்ர்ப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தொலைபேசி மூலம் அவரது மனைவியிடம் கூறியுள்ளனர். இப்போது அவரது நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியும் தனது கணவரை தமிழகம் கொண்டுவந்து இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிடலாம் என்று பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களிடம் தனது குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

 

அவரது கணவர் குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, ஏற்கனவே எனது கணவருக்கு தலையில் ஏதோ கட்டி இருப்பதாகவும் அதை சரி செய்வதற்காக நமது ஊருக்கு வந்து இங்குள்ள மருத்துவமனைகள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்படுவதற்காக பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்துள்ளார்.

 

ggg

 

இந்திய தூதரகத்தில் தனது உடல்நிலையை பற்றி எழுத்துமூலம் முறையாக விண்ணப்பித்து காத்துக்கிடந்துள்ளார். இந்த கரோனா பரவல் காரணமாக அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதப்படுத்தி உள்ளனர். இந்த கால தாமதம் அவருக்கு ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. வேலையில் இருந்த போதே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இன்னும் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். நமது தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு எனது கணவரை உடனடியாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளேன். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 

அவர் வேலை செய்த கன்சக்ஷன் கம்பெனியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் பொறுப்போடு எந்த பதிலும் சொல்லவில்லை. என் கணவருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பதில் கூறுகின்றனர். எனவே எனது கணவரின் நிலைமை அங்கு எப்படி உள்ளது. அவர் இங்கு கொண்டு வருவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்காக  நானும் எனது நான்கு பிள்ளைகளும் காத்திருக்கிறோம் என்றார்  கலங்கிய கண்களுடன் அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி பிரசவத்தின்போது இறந்து போய் உள்ளார். அதன் பிறகு இரண்டாவது மனைவியாக அஞ்சலை என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலை நான்கு குழந்தைகளும் பாலகிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கின்றனர். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அவரது நண்பர்கள் மூலம் அங்கிருந்து வரும்தகவல்கள் அவரது குடும்பத்தினரை கலக்கமடைய வைத்துள்ளது.

 

பாலகிருஷ்ணனின் மனைவி அவரது  நான்கு பிள்ளைகள் பரிதவித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் இந்திய தூதரகம் பாலகிருஷ்ணன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் வடகராம் பூண்டி கிராம மக்களும் அவரது குடும்பத்தினர்களும். பாலகிருஷ்ணன் போன்று அயல்நாடுகளில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகளில் அவஸ்தைப்படும் தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. 

 

 

சார்ந்த செய்திகள்