Skip to main content

நீதி கிடைக்காத மரணம்! டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை கைவிட்ட சி.பி.ஐ.!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
DSP-Vishnu-priya



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக முதல் பணி நியமனம் பெற்றவர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. பணியில் சுறுசுறுப்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார் என்று சக போலீஸ்காரர்களே கூறி வந்தார்கள். இந்த நிலையில்தான் கோகுல்ராஜ் என்ற இளைஞர் 2015 ஜீன் 24 அன்று கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கிடந்தார். 
 

இந்த கோகுல்ராஜ் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, அதன் மூலமாக அச்சமூகத்தைச் சேர்ந்த சிலரால் கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது. கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் யுவராஜ். இவர் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவராகவும் இருக்கிறார். கொலை சம்பவத்திற்கு பிறகு யுவராஜ் தலைமறைவானார். இந்த சாதி ஆணவ படுகொலையை விசாரித்த விசாரணை அதிகாரியாக இருந்தவர்தான் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. 

 

gokulraj

கோகுல்ராஜ்
 

இந்த கொலை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டாலும் ஏ1 ஆன யுவராஜ் கைது செய்யப்படவில்லை. இதற்கு பலமுனைகளில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு மனஉளைச்சல் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஒருதரப்பு யுவராஜை கைது செய்யக்கூடாது என மிக கடுமையாகவே டிஎஸ்பியை நெருக்கியுள்ளது. சம்மந்தப்பட்ட யுவராஜ் பலமுறை டிஎஸ்பியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிரட்டலாகவும் பேசியிருக்கிறார். 
 

இந்த சூழ்நிலையில்தான் இந்த வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா, அப்போது நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் இந்த வழக்கின் ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு நாமக்கல் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னணியில்தான் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் டிஎஸ்பி விஷ்ணபிரியா தனது முகாம் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். 
 

இது கொலை என்றும், மர்ம மரணம் என்றும், மன உளைச்சலால் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும் அப்போது போலீசாரால் கூறப்பட்டது. முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க, அதன் பிறகு விஷ்ணுபிரியா தந்தை ரவி, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனு அளித்தார். அதன் அடிப்படையிலேயே சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

Yuvaraj

யுவராஜ்
 

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான் என்றும், இந்த வழக்கை கைவிடுவதாக கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. சிபிஐ தன்து விசாரணையை கைவிடுவதாக அறிவித்திருப்பது விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

நம்மிடம் பேசிய நாமக்கல் மாவட்ட போலீசார், சிபிஐ விசாரணையின்படி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை என்று நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர் ஏன் தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு தூண்டிய சக்தி எது. அதைப்பற்றி எந்த விசாரணையும் இல்லையே. டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பதற்கு முன்பு 11 பக்கம் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்று இன்னமும் முழுமையாக தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரது லேப்டாப், மொமைல் போன் போன்றவற்றில் பலவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த பதிவும் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்கொலையே என்றாலும் நீதி வேண்டாமா என வேதனையோடு கூறினார்கள். 

சார்ந்த செய்திகள்