வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் ரூ.1 லட்சத்திற்கு, ரூ.15 ஆயிரம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கியப் புள்ளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகார், உயர் அதிகாரிகளுக்கு சென்றதையடுத்து, டிஎஸ்பி கபிலனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதோடு அவரிடம் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக ஐ.எஃப்.எஸ் நிறுவனம் சார்பில் ஹரி என்பவரிடம் இருந்து ரூ. 30 லட்சம் வாங்கியுள்ளதாக டி.எஸ்.பி. கபிலன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் டிஎஸ்பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் வழக்கு தொடர்பாக கபிலன் யாரிடம் எல்லாம் விசாரித்தாரோ, அவர்களிடம் மீண்டும் விசாரிக்கவும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.