Skip to main content

மனைவி பிரசவ செலவிற்காக வைத்திருந்த பணத்தை குளம் சீரமைக்க நிதியாக கொடுத்த கணவர்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

    கொத்தமங்கலத்தில் மனைவி பிரசவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை குளம் சீரமைக்க நிதியாக வழங்கினார் கணவர். செலவு இல்லாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்ததால் மருத்துவமனைக்கு செய்ய வேண்டிய செலவில் ஒரு பகுதியாக ரூ. 10 ஆயிரத்தை குளம் சீரமைக்க நிதியாக கொடுத்தனர் ஒரு தம்பதி. பதிலுக்கு குழந்தைக்கு பலன் தரும் பலா மரக்கன்றுகளை வழங்கினார்கள் இளைஞர்கள்.

k


    புதுக்கோட்டை மாவட்ட கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் கடந்த 70 நாட்களாக அந்தப் கிராம இளைஞர்கள் முயற்சியில் பலதரப்பிலும் நிதி பெற்று குளம், வரத்து வாய்க்கால்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களில் இந்தச் செயலைப் பார்த்து பலரும் தாராளமாக நிதியும், மற்றும் பல உதவிகளும் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குழந்தைகள் இணைந்து குளம் தூர்வார நிதி வழங்கினார்கள். அதே போல திருமண மேடையில் புதுமணத்தம்பதிகள் நிதி வழங்கினார்கள்.


    அதே போல கொத்தமங்கலம் கிழக்கு சங்கரன் தெருவைச் சேர்ந்த உலகநாதன் மனைவி  உதயாவிற்கு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவமாக ஆண்குழந்தை பிறந்தது. அதனால் உலகநாதன் குளம் சீரமைப்புக்குழுவினரை அழைத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து பிரசவம் நடந்திருந்தால் பல ஆயிரங்கள் பணம் செலவாகி இருக்கும்.  ஆனால் செலவு இல்லாமல் என் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனால் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணம் ரூ. 10 ஆயிரத்தை குளம் சீரமைக்க கொடுப்பதாக கூறி வழங்கினார்.

 

நெகிழ்ந்துபோன குளம் சீரமைப்பு இளைஞர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பதிலுக்கு குழந்தைக்காக பலன் தரும் இரு பலாமரக்கன்றுகளை வழங்கி இந்த மரங்கள் இப்போது பிறந்த குழந்தை வளரும் போது பலன் கொடுக்கும் என்று கூறினார்கள். இது போல குளம் தூர்வார ஏராளமானவர்கள் நிதி வழங்கி நெகிழச் செய்து வருவதாக இளைஞர்கள் கூறினார்கள்.
            

சார்ந்த செய்திகள்