தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற போதை பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி துவரங்குறிச்சி பகுதியில் போலீசார் நேற்று (03.12.2021) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி அதனை சோதனை செய்தனர். அதில், 29 மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வண்டி மற்றும் புகையிலையைப் பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து மாதிரிகளை எடுத்துள்ளனர். அவை தமிழ்நாடு அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று மணப்பாறை நீதிமன்றத்தில் அந்த வாகனம் ஆஜர்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.