வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கால்நடை வைத்திருப்பவர்கள் காலையில் அவைகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இது காய்கறி கடைகள், பூக்கடைகள் உட்பட எல்லா இடங்களிலும் பொருட்களை சாப்பிடுகின்றன. மதிய நேரத்தில் அதன் உரிமையாளர்கள் வந்து பால் கறக்கும் மாடுகளில் சாலையிலேயே அமர்ந்து பால் கறந்துக்கொண்டு மீண்டும் அங்கேயே விட்டுவிடுகின்றனர்.
சாலையில் சுற்றி திரியும் இந்த கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வி.கோட்டா, பேரணாம்பட்டு சாலையில் கால்நடைகள் சாலையிலே ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள் மாடுகள் மீது மோதி பலர் கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்பு, என பல பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். இதுக்குறித்து நகராட்சிக்கு, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரியதாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகள் சாலைக்கு வராமல் தடுத்து நடவடிக்கை எடுக்கும்படி பேரணாம்பட்டு பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர். கால்நடைகளை சாலையில் ஓட்டி விடும் உரிமையாளர்களுக்கு அபராதமும் மீண்டும் மீண்டும் அப்படி செய்தால் மாடுகள் பிடித்து வைத்து நகராட்சி ஏலம் விடப்படும் என்கிற விதிகள் இருந்தாலும் நகராட்சி அலுவலர்கள் இதை நடைமுறைப்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.