திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுநர் திடீரென்று மயங்கிய நிலையிலும் பேருந்தில் இருந்த சுமார் 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரை நோக்கி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பழனியும் நடத்துநர் கோபு குமாரும் தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் ஓட்டுநர் பழனிக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதை அறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்ற சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பழனி, உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாகப் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சமூக ஆர்வலர், ஓட்டுநர் பழனியை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஓட்டுநரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகம் மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து, சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.