
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வருகை தந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் கே.என். நேருவை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்பட திமுக பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகளை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே. என்.நேரு, “ஆழியார் திட்டம் கைவிடப்படவில்லை. விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விவசாயிகளிடம் பேசி சமாதானப்படுத்தி தண்ணீர் எடுக்கப்படும். கேரளாவில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பெற்றுத் தந்துவிட்டு எடுத்துக்கொள்ளலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் மாற்றுத்திட்டம் எதுவும் செய்ய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது போல் ரூ.543 கோடி செலவில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மாநகருக்கு நேரடியாக குடிநீர் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணிகள் தொடங்கும்” என்று கூறினார்.