சென்னை, அண்ணா அறிவாலயத்தின், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய உரிமைக்குரல், தி மேன் அண்ட் மேசேஜ் (The Man and Message), மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ் (My voice for the voiceless), பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.1.2024)வெளியிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்திய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிகழ்ச்சியில், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தி இந்து நாளிதழ் குழுமத் தலைவர் என். ராம், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மூலம் 59 கோடி ரூபாய் மாநாட்டிற்கு நிதி கொடுத்தார்கள். அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ரூ. 25 லட்சம் கொடுத்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பரவாயில்லை, இளைஞர் அணி மாநாட்டுக்குத்தான் நிதி கொடுக்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதே வேண்டுகோளை திமுக தலைவரிடம் இளைஞர் அணி மாநாட்டில் வைத்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அனுபவம் முக்கியம் தான். இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்காவது வாய்ப்பு கொடுங்கள்” என டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கைதட்டி புன்னகையுடன் ரசித்தது குறிப்பிடத்தக்கது.