அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தே அதிமுக வெளியேறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி அமைப்பது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் மாநில தலைவர்களிடமும், பாஜக நிர்வாகிகளிடம் இதுகுறித்து கருத்துக் கேட்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலை வராததால் கூட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. பின்னர் வந்த அண்ணாமலை சுமார் ஒரு மணிநேரம் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில், ''நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து டெல்லி தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். தேர்தல் கூட்டணி குறித்து எனது கருத்தை ஏற்கனவே நான் ஆழமாக சொல்லிவிட்டேன். எனவே கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் இல்லாமல் தனித்து நிற்பதற்கு தயாரான வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கூட்டணியை விட்டு வெளியே சென்றவர்கள் பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நமக்கான பணி என்னவோ அதை தான் நாம் முன்னெடுக்க வேண்டும். திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். தொடர்ந்து நடைபெற இருக்கும் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் மத்திய அரசால் பயனடைந்த இளைஞர்களை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு கொடுத்து அண்ணாமலை பேசியுள்ளார்.