தற்போது பனம் பழங்கள் உதிரும் காலம். இந்த காலத்தில்தான் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடவு செய்யப்படுவதுடன் பனங்கிழங்குகளுக்காகவும் பதியம் போடப்படுகிறது. பனை மரங்கள்தான் வறட்சியை தாங்கி நிலத்தடி நீரைச் சேமித்து வைத்திருக்கும் என்பதாலும் புயல் காற்றாலும்கூட பனை மரங்களை அசைக்க முடியவில்லை என்பதை உணர்ந்ததாலும், அழிந்துவரும் பனைமரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பனை விதை நடவுத் திருவிழாக்கள் நடந்தது. கோடிக்கணக்கான விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் தற்போது பனை விதைப்புத் திருவிழா தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் பனை விதையைச் சேகரித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரோனா விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பனை விதையைச் சேகரித்துத் தங்கள் கிராம நீர்நிலைகளின் கரைகளில் நடவுசெய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் கடந்த மாதம் சுதந்திர தினத்தில் தாங்கள் சேகரித்த ஆயிரக்கணக்கான பனைவிதைகளை வெளியூர்களுக்கு அனுப்பியதுபோக தங்கள் ஊர் ஏரிக்கரையில் நடவுசெய்து தமிழக இளைஞர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தனர் இரு சகோதரிகள்.
அதேபோல எதிர்வரும் 22 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் இயங்கும் 'கிரீன்நீடா' அமைப்பும் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் இணைந்து நீடாமங்கலம் தொடங்கி 12 கி.மீ தூரத்திற்கு பனை விதைகள் நட திட்டமிட்டு அழைப்புக் கொடுத்திருந்தனர். “பணம் வேண்டாம், பனைவிதை போதும்” என்ற அந்த அழைப்பை பார்த்த பலரும் இந்த முயற்சியில் கரம் கோர்த்தனர். இதுவரை சுமார் 25 ஆயிரம் பனை விதைகளை, பல ஊர்களுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளி ஒருவர், தான் சேகரித்த சுமார் 2 ஆயிரம் விதைகளுடன் வந்து நானும் கலந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல திருவாரூர் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் கலந்துகொள்கிறார்கள். நாளுக்கு நாள் விதைகள் அதிகமாகக் கிடைப்பதால் 30 கி.மீ தூரம் வரை சாலை ஓரங்களில் விதைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பணிகளில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் பனை தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்படுவதுடன் பனங்கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட சாக்லேட் உள்பட பல்வேறு உணவுப் பொருட்கள் அறிமுகமும் செய்யப்படுகிறது.