கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.