அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைபரப்பு செயலாளராகவும், டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த தங்கதமிழ்செல்வனும், டிடிவி க்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் தங்கதமிழ்செல்வனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து டிடிவி நீங்கினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பாதிக்கப்பட்ட தங்கதமிழ்செல்வனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே இல்லை. கூடாரம் எல்லாம் காலியாகி வருகிறது. அந்த அளவுக்கு டிடிவி சரவ அதிகார போக்கை கடைபிடித்து வருகிறார் தற்பொழுது தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை கொஞ்ச நாள் ஓய்வெடுக்க இருக்கிறேன் என மீடியாக்கள் மத்தியில் பரபரப்பாக பேசியும் வருகிறார்.
ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்து ஒபிஎஸ்க்கு செக் வைக்கும் முயற்சியில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் எடப்பாடி மகன் பிதின்குமார் மூலமும் மறைமுக பேச்சும் ஒருபுரம் நடந்து வருகிறது. ஆனால் ஒபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாகவே தங்கதமிழ்செல்வனை (டிடிஎஸ்) மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என போர்க் கொடி தூக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமையிலும். அதுபோல் தேனி மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருக்கோடை ராமர் முன்னிலையிலும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் விடுதியில் திடீரென தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகரம்,ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணி செயலாளர்கள் என 60க்கு மேற்பட்டோரை அழைத்து ரகசிய கூட்டம் போட்டிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் தான் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் ஏகமனதாகவே தங்கதமிழ்ச்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்தால் கோஷ்டி பூசலை உருவாக்குவார். அதோடு சாதி அரசியலையும் முன்னிலைபடுத்தி நமக்குள் கருத்து வேறுபாடுகளையும் கொண்டு வந்து விடுவார். கட்சி வளர்ச்சியும் பாதிக்கும் அப்படிபட்ட தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எம்.பி . ரவீந்திரநாத் குமார் மற்றும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இப்படி மாவட்டத்தில் எம்.பி. முதல் பேரூர் பொறுப்பாளர்கள் என ஒட்டுமொத்த பொறுப்பாளர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்து போட்டு மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் ஆகியோரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
அதை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சென்னை சென்று தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வரான ஒபிஎஸ் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடியை சந்தித்து தீர்மானம் நகலை கொடுக்க இருக்கிறார்கள். அதன் மூலம் தங்கதமிழ்செல்வனும் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அந்த தீர்மானத்தை எடப்பாடி தரப்பு ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க முடியும்.