வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சர்ச் உள்ளது. அது பொதுயிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச் க்கு எதிரில் அரசு புறம்போக்குயிடம் காலியாகவுள்ளது. அந்தயிடத்தில் ஒரு தரப்பினர் கோயில் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கி நிதி வசூல் போன்றவற்றில் ஈடுப்பட்டுவந்தனர்.
இன்று டிசம்பர் 26ந்தேதி காலை பூமி பூஜை போட்டு கோயில் கட்டுமானப்பணியை தொடங்குவதற்கான வேலைகளை செய்துவந்தனர். இதனை சர்ச் தரப்பினர் வந்து தடுத்துள்ளனர். ஏன் தடுக்கிறீர்கள் என கோயில் கட்டும் தரப்பினர் கேட்டுள்ளனர். சர்ச் க்கு முன்னாடி கட்டாதிங்க வேற எங்காவது போய் கட்டுங்க என்றுள்ளனர். இதனால் காரசார விவாதம் ஏற்பட்டது.
கோயில் கட்ட விடாதவர்களை கண்டித்து ஒருச்சாரார் திருப்பத்தூர் – பொம்மிகுப்பம் சாலையில் சாலைமறியல் அமர்ந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் அமர்ந்ததால் பதட்டமானது. போக்குவரத்து தடைப்பட்டதால் காவல்துறையினர் வந்து சமாதானம் பேசினர். அவர்கள் சொல்வதை யாரும் கேட்காததால் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து இருதரப்பையும் அழைத்து பேசினர்.
இப்போது போராட்டத்தை வாபஸ் பெறுங்கள், பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனச்சொல்லி 2 மணி நேர போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் என ஒருத்தரப்பும், சர்ச் எதிரில் கோயில் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு அதிகாரிகளிடம் தங்களது கருத்தை தெரிவித்தனர். இருதரப்பின் கருத்தை கேட்ட அதிகாரிகள், சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதற்குள் நாங்கள் இடம் பற்றிய கோப்புகளை ஆராய்கிறோம், சமாதான கூட்டத்தில் பேசுவோம் எனச்சொல்லியுள்ளனர்.
இருதரப்பினரும் கடும் கோபத்தில் இருப்பதால் அக்கிராமத்துக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.