மதுரை மாவட்டம்- களிமங்களத்தை சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்-‘மதுரை அருகிலுள்ள குன்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்மாய்க்கு தண்ணீர் வரத்தானது பெரியார் மற்றும் வைகை ஆற்று பாசனத்திலிருந்து வருகிறது.
இந்தக் கண்மாயிலிருந்து வரும் நீர் குன்னத்தூர், களிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது. கண்மாயின் மூலம் வரும் வருவாயை இரண்டு பஞ்சாயத்துகளும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என, கடந்த 1986- ஆம் ஆண்டு நடந்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால், மனுவை அதிகாரிகள் நிலுவையில் வைத்தனர்.மேலும், கண்மாயின் வருவாயை குன்னத்தூர் கிராமம் மட்டும் முழுமையாக பெற்றுக்கொள்கிறது. இதனால் களிமங்களம் கிராமத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே, குன்னத்தூர் கண்மாயை இரண்டாகப் பிரித்து களிமங்களம் மற்றும் குன்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களில், தனித்தனி பாசனத்திற்கு உபயோகப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 27- ஆம் தேதி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, குன்னத்தூர் கண்மாயை இரண்டாகப் பிரித்து களிமங்களம் கிராமத்திற்கு விவசாயப் பாசனத்திற்கும், கண்மாயில் இருந்து வரும் வருவாயை பெறுவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.’என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு நேற்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கண்மாயை இரண்டாகப் பிரிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.