மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம் தோறும் நடக்கும் மீனவா் குறை தீா்க்கும் கூட்டத்தில் மீனவ பிரநிதிகள் மீனவ மக்களின் குறைகளை சுட்டிக்காட்டி ஆட்சியரையும் அதிகாரிகளையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார்கள். இப்படிபட்ட நிலையில் தான் மத்திய அரசின் தேசிய கடல்வள வரைவு மசோதவுக்கான கருத்து கேட்பு கூட்டம் நாகா்கோவிலில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் கலந்து கொண்ட பல்வேறு மீனவ அமைப்பை சோ்ந்த நிர்வாகிகளுக்கும் மீனவா்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்தனா்.
அப்போது பள்ளம் கிராமத்தை சோ்ந்த நெய்தல் மக்கள் இயக்க நிர்வாகியான மீனவ பெண்,"காலம் காலமாக கடலையும் கடல் வளத்தையும் நம்பியிருக்கிற மீனவா்களின் சொத்துத்தான் கடல். அந்த சொத்தை எங்களிடம் இருந்து பறிக்க விடமாட்டோம். விவசாயிகளிடமிருந்து விவசாய நிலத்தை எப்படி பறிக்க முடியாதோ அதே போல் தான் கடலையும் பறிக்க முடியாது. ஆனால் இதே போன்று சட்டங்களை போட்டு பறிக்க முயலுகின்றார்கள்" என பேசினார். இதற்கு இடையில் அந்த பெண் திடீரென்று கலெக்டரிடம் , சார் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என கேட்க அதிர்ந்து போன கலெக்டா், "என்னுடைய சொத்து கணக்கை ஆண்டுத்தோறும் அரசிடம் முறைப்படி தெரிவித்து வருகிறேன். அதை உங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் நீங்க கேட்டதற்கு சொல்லுகிறேன். மகராஷ்டிராவில் ஒரு வீடு உள்ளது. அது எனக்கும் தம்பிக்கும் உள்ளது" என்றார்.
உடனே அந்த பெண் நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு உங்க வீட்டை தருவீா்களா? என்றார். அதற்கு கலெக்டா் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த வீட்டிற்கு மாற்றாக ஒரு இடத்தை தந்தால் வீட்டை தருகிறேன் என சொல்ல, அதற்கு அந்த பெண் கடல் எங்கள் சொத்து அதை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது என்பதற்கு தான் உங்கள் சொத்து மதிப்பை கேட்டேன் என்றார்.