கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது மேல்மாம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயது பழனிவேல். முந்திரி வியாபாரியான இவர் முந்திரி கொட்டைகள் உடைத்து முந்திரிப் பருப்புகளை பதப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இதனால் அந்த பகுதி சுற்றுப்பட்டு கிராம மக்களிடம் நன்கு அறிமுகமானவர். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது முந்திரி பருப்பை பதப்படுத்தும் இயந்திரங்களை சுத்தம் செய்து அதன்மீது குழாய் மூலம் தண்ணீர் அடித்து கழுவிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது.
இதனால் தூக்கி எறியப்பட்ட பழனிவேல் மயக்கமடைந்துந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அவரை அவசரம் அவசரமாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பழனிவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேலின் உறவினர்கள் இல்லை.... இல்லை.... .பழனி மயக்க நிலையில் தான் உள்ளார். அவர் இறக்கவில்லை இங்கிருக்கும் மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறியதோடு பழனியை அங்கிருந்து கட்டாயப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனிவேலை பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்களும் கூறியுள்ளனர். இதையடுத்து இறந்த பழனியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் பழனிவேலின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.