Skip to main content

இளம் பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ. விசாரணை

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

Newly married woman passed away RDO investigation

 

கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(33). கட்டட வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மோகனாம்பாள் (32) என்ற மனைவியும், 6 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை, மற்றும் பிறந்து 37 நாட்களான மற்றொரு ஆண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சிவானந்தம் குடும்பத்துடன் அதே பகுதி மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனி, அம்மன் நகரில் வசித்து வருகிறார். 

 

இந்த நிலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மோகனாம்பாள், தானாக உளறிக்கொண்டிருப்பதாகக் கூறி,  நல்லிசெல்லிபாளையத்தில் உள்ள மாமியார் ராணி வீட்டில் நேற்று முன்தினம் காலையில் சிவானந்தம் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று சிவானந்தத்தை செல்போனில் அழைத்த மோகனாம்பாளின் அக்கா ஜானகி, தனது தங்கையை காணவில்லை எனக் கூறியுள்ளார். 

 

இதனையடுத்து சிவானந்தம் மற்றும் உறவினர்கள் தேடியபோது அங்குள்ள தனியார் தோட்டத்து கிணற்றின் அருகே மோகனாம்பாளின் செருப்பு மட்டும் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதி, இது குறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

இதனையடுத்து நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை போலீசார் கரூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் மோகனாம்பாளின் உடலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும், திருமணமாகி 7 ஆண்டுக்குள் இளம்பெண் இறந்ததால், இது குறித்து  கரூர் கோட்டாச்சியர் ரூபினா மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு சென்று மோகனாம்பாளின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்திய பின்னரே, உடற்கூராய்வு நடத்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்