ஏரித்தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் பரப்பியது போல, காவிரித் தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கும் புது முயற்சியாக மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை வீசுகிறார்கள் போல மதுப் பிரியர்கள்.
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு, அதே கையோடு தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைத்த பண்டங்களையும் வாங்கிக்கொண்டு சாலையோரம், வயல் வரப்பு, குளம், ஏரி, ஆற்றங்கரைகளில் அமர்ந்து மதுவைக் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் பாட்டிகளை உடைத்து சாலையிலும் வயலிலும் வீசுவதோடு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களையும் தூக்கி வீசிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் பாதிக்கப்படுவதோடு, வயலில் இறங்கி ஈரக்காலோடு நடவு செய்யும் பெண்கள், உழவு செய்யும் விவசாயி கால்களில் குத்துவதுடன், நிலத்தடி நீர் கீழே இறங்காமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள். அரசாங்கம் தடை விதித்தாலும் யாரும் கேட்பதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் மக்காத பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து மக்களை வதைக்கிறது.
இதேபோல, ஆற்றங்கரை ஓரங்களில் மது குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை ஓடும் ஆற்று நீரில் வீசுவதால், எங்கெல்லாம் கீழ் பாலங்கள் உள்ளதோ அங்கெல்லாம் அவை மலைபோல தேங்கி நிற்கின்றன. இதனால் மதகுகளில் அடைப்பு ஏற்பட்டு ஆற்றங்கரை உடைப்பு ஏற்படும் அபாய நிலையும் ஏற்படுகிறது.
இப்படி புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள கீழ்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மது, தண்ணீர் பாட்டில்கள் தேங்கி மலை போல காட்சியளிப்பதைப் பார்த்துதான் ஒரு விவசாயி, இது ஆற்றுத்தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவே இப்படி பாட்டில்களை வீசி தண்ணீரை மறைத்திருக்கிறார்கள் என்று வேதனையோடு சொல்லிச் சென்றார்.
இத்தனை கழிவுகளும் வயல்களுக்குள் போனால், அந்த வயல்களில் எப்படி விளைச்சல் இருக்கும்.. கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? இனிமேலாவது திருந்தட்டும்.