அரியலூர் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பல்வேறு கருத்துகள், குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. பாமக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாமக பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.செந்தில் நமக்கு அளித்த பதில்கள்...
டாக்டர் செந்தில் :
தமிழகத்தில் முற்போக்கு என்பது புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதில் தொடர்புடைய இரண்டு தரப்புகளின் சாதி, அவர்கள் பின்பற்றும் கருத்தாக்கம் இவற்றைக் கொண்டு முன்முடிவுகளோடு 'இவன்தான் தப்பு செய்திருப்பான்' என்று அணுகுகிறார்கள். சமீபத்தில் அரியலூரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் கொல்லப்பட்டபோது அது ஏதோ ஒரு சமூகமே சேர்ந்து செய்தது போல பரப்பினார்கள். இறுதியில் நடந்தது வேறு. அதுபோல மரக்காணத்தில் நடந்த சம்பவத்தின் துவக்கத்தைப் பேசாமல், ஏதோ பாமகதான் வன்முறை செய்தது போல பரப்புரை செய்தார்கள். அது மிகப்பெரிய சதி.
பொன்பரப்பியில் நடந்த உண்மையை சொல்கிறேன். வீரபாண்டியன் என்ற மாற்றுத்திறனாளி வாக்களிக்கப் போகிறார். அவரை திருமாவளவனுக்கு வாக்களிக்கச் சொல்லி தாக்குகிறார்கள் அங்கிருந்த வி.சி.க.வினர். இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பானையை உடைக்கிறார்கள் அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து விசிக கட்சியினர் வசிக்கும் அந்தப் பகுதி வழியே செல்லும் அதிமுக கூட்டணியை சேர்ந்த சுப்பிரமணியன், கமலக்கண்ணன் உள்ளிட்டோரை பயங்கரமாகத் தாக்குகிறார்கள் விசிகவினர். மது பாட்டிலை உடைத்து தாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து சாலை மறியல் செய்தவர்கள் மீதும் தொடர்ந்திருக்கிறது தாக்குதல். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர் மஞ்சள் சட்டை அணிந்தவர் என்பதற்காகவே அவரையும் தாக்கியிருக்கிறார்கள், ஆனால் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இது தெரியாமல் மக்கள் கொதிக்கிறார்கள். அரியலூர் திமுக செயலாளர் சிவசங்கர் பொன்பரப்பி மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பிரயோகிக்க வேண்டுமென்கிறார். இந்த ஒரு சம்பவமென்று இல்லை. இந்தியா முழுவதும் இந்த பேட்டர்ன் நடக்கிறது. தமிழகத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒரு சில கருத்துகளை பேசினால் முற்போக்கு என்று நினைத்துக்கொள்கிறார்கள்".
கேள்வி: பொன்பரப்பியில் நடந்த வன்முறை வீடியோவை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சாதியின் பெயரைச் சொல்லி திட்டுவது போல இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு குடியிருப்பில் புகுந்து பலர் தாக்குவது தெரிகிறதே?
டாக்டர் செந்தில் : இல்லை, இல்லை... எல்லோரும் தாக்கப்பட்டவர்கள் பட்டியலின மக்கள் மட்டுமே என்று பேசுகிறார்கள். அதிகமாகத் தாக்கப்பட்டது பிறரே. பெரியாரிடம் இவர்கள் சமூக நீதி, சாதி ஒழிப்பை கற்றுக்கொள்வதை விட அவர் கொண்டிருந்த நேர்மையை கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பலரும் தவறு செய்தவர்கள் எந்த சாதியென்று பார்த்து அதற்கேற்ப செய்தி பரப்பி ஒரு கேரக்டர் அசாசினேஷன் செய்கிறார்கள். இது போல பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. இறுதியில் உண்மைதான் நிக்கும். தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கவேண்டாமென்று நினைப்பவர்கள் கொஞ்சம் நேர்மையாக இதை அணுகி உண்மையை செய்தியாகவேண்டும்.