நீலகிரியில் உலவும் புலியை சுட்டுப் பிடிக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேவன் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று கடந்த சில நாட்களாக நடமாடிவந்த நிலையில், இதுவரை 4 பேரை அது கொன்றுள்ளது. இதனால் புலியை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் வனத்துறையினர் கடந்த 11 நாட்களாக எஸ்டேட் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர். புலியை சுட்டுப்பிடிக்க வன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்ற செய்தியும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதை அதிகாரிகள் மறுத்த நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். தங்களுக்கு அந்த மாதிரியான எண்ணம் இல்லை என்றும், உயிருடன் பிடிக்கவே போராடிவருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புலி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.