Skip to main content

இரவு நேரத்தில் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
இரவு நேரத்தில் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளி ஆகிய 2 நாட்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் (ஏ1 அளவீடு) அல்லது 145 டெசிபல் (சி- அளவீடு)க்கு அதிகமாக ஏற்படுத்திடும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. சரவெடிகளை பொறுத்தமட்டில், அவை வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது மேலே குறிப்பிட்ட அளவில் இருந்து 5 log10(n)db என்ற அளவிற்கு குறைத்து கணக்கிடப்பட்டு அந்த அளவிற்குள் இருக்க வேண்டும்.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: 125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது. ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்