திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இளைஞர் அணி நிர்வாகிகளின் மோட்டார் சைக்கிள் பேரணி கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் இருந்து தொடங்கியது.
இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து திமுக அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், சாதனைகள், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடம் விளக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 4 மண்டலங்கலாக செல்லும் இந்த பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேரணி நவம்பர் 23-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை முடித்துக் கொண்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்தது. மாவட்ட எல்லையான சிதம்பரம் அருகே கொள்ளிடம் பாலத்தில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம். ஆர். கே. பி கதிரவன் தலைமையிலும், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான பொறியாளர் கார்த்தி முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகன பேரணியில் வந்த அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த பேரணி அண்ணாமலை நகருக்கு சென்றது. அங்கு திமுக பேரூர் கழக செயலாளரும் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரம் நகரத்தில் நகர செயலாளர் கே. ஆர்.செந்தில்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புவனகிரி வழியாக காட்டுமன்னார்கோவில் கோவிலுக்கு பேரணி சென்றது.