பெரம்பலூரில் திமுக முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர். மு. தேவராஜன், இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானர்.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களம்பட்டியில் பிறந்த தேவராஜன் (71) , கடின உழைப்பால் மருத்துவரானார். இவரை திமுக-வின் அடித்தளம் என்றே சொல்லலாம். 1996 - 2001 வரை பெரம்பலூர் தொகுதி எம்.எல்ஏவாக இருந்தார். அதிமுகவின் கோட்டையான பெரம்பலூரில் திமுகவை தோள்கொடுத்து தூக்கி நிறுத்தியவர். மருத்துவ துறையில் வல்லவர் என்பதை விட வள்ளல் என்றே சொல்லாம். தற்கொலைக்கு முயன்று பூச்சிக்கொல்லி, உள்ளிட்ட விஷம் அருந்தியவர்களை காவல், நீதிமன்ற வழக்குகளுக்கு அஞ்சாமல் துணிச்சலாக காப்பாற்றிய மருத்துவர்.
ஏழைகளிடம், கட்டணம் பெறாமல். கொடுப்பதை வாங்கி கொண்டு பலரின் உயிரை மீட்டு, குடும்பத்துடன் வாழ வைத்துள்ளார். மருத்துவர் என்ற அகம்பாவம் இல்லாமல், எம்.எல்.ஏ என்ற செருக்கு இல்லாத, ஆடம்பரம் விரும்பாத எளிய மனிதர். பெரியார் தொண்டரான இவர் சிறியோர்களிடமும், பெண்களுக்கு மதிப்பளிக்க கூடிய மனிதர். தனக்கெனவும், குடும்பத்திற்கு எனவும், எதுவும் வைத்துக்கொள்ளாத மனிதர்.
எந்த நேரத்திலும், அரசியல் உதவியாகட்டும், மருத்துவ சேவையாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தேடிய மருத்துவர் இவரே. சமூக சீர்த்தம், சமத்துவம் சிந்தனை கொண்ட பலர் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பயில உதவி செய்துள்ளார். இவருக்கு திமுக முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், சிகிச்சை பெற்ற நோயாளிகள், பொதுமக்கள் பலர் இன்று பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள அவரது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று மாலை திருச்சியில் உள்ள கி.ஆ.பெ விசுவநாதன் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.