சென்னையில் தலைமை செயலகத்தில் மத்திய ஆய்வுக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மோடியை சந்தித்து நிவாரண நிதி கோரியுள்ளார், அதேநேரத்தில் மத்திய ஆய்வுக்குழுவினர் தமிழகம் வந்து சேத பாதிப்புகளை கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதமர் மோடியிடம் வைத்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். அந்த குழுவில் நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி கபில், வேளாண்துறை இயக்குனர் ஸ்ரீவர்சவா, ஊரக வளர்ச்சிதுறை துணைச்செயலாளர் மாநிக்சந்த் பண்டிட், மின்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவுடன் சென்னை நீர்வளத்துறை அதிகாரிகள் ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பொறியியல் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தாஜ் ஹவுஸில் தங்கியிருந்த மத்திய குழுவினர் தற்போது தலைமை செயலகத்தில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர் முதற்கட்டமாக புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர். புதுக்கோட்டை தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.