Skip to main content

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்! – செங்கல்பட்டு கூட்டுறவு பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 12/10/2020 | Edited on 13/10/2020

 

DMK RS BHARATHY CASE HIGHCOURT

 

கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் 7 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை, 4 வாரத்தில் முடிக்க வேண்டுமென எச்சரித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தவறும் பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001- ம் ஆண்டு வரை, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவராக இருந்த, தற்போதைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ் பாரதி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் மூலம், வணிக வளாகம் கட்டியதில், 7 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரூபாய் முறைகேடு செய்ததாகக் கூறி,  கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, இந்த முறைகேடு தொடர்பாக, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு கடந்த 2004- ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அதன் பின்னர், இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை, ஆறுமாத காலங்களுக்குள் முடிக்க, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.பரணிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை 8 வார காலங்களில் முடித்து, அதன் அறிக்கையை அக்டோபர் 12- ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

 

Ad


இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, கூடுதல் அவகாசம் வேண்டுமெனக் கோரப்பட்டது. ஏற்கனவே, போதுமான கால அவகாசம் வழங்கிய நிலையில், கூடுதலாக அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த நீதிபதி, நான்கு வாரத்திற்குள் ஆர்.எஸ் பாரதி மீதான புகார் குறித்து விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் எச்சரித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்