Skip to main content

''கொல்லிமலை: அரிசி இலவசமாக போட்டுவிட்டு வீணாய்ப்போன பொருள்களை 250 ரூபாய்க்கு தலையில கட்டறாங்க!'' ஊராட்சி சபை கூட்டங்களில் பெண்கள் புகார்!!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
ko


கொல்லிமலையில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், ரேஷன் கடைகளில் அரிசியை இலவசமாக போட்டுவிட்டு, மக்களுக்கு காலாவதியான பொருள்களை 250 ரூபாய்க்கு தலையில் கட்டிவிடுவதாக பெண்கள் புகார் கூறினர்.

 


மக்களவை தேர்தலையொட்டி, ஒவ்வொரு குக்கிராமம்தோறும் ஊராட்சி சபைக்கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதற்கு பரவலாக ஆதரவும் கிடைத்து வருகிறது. நாமக்கல் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 


இந்தக்குழுவினர், திமுகவே இதுவரை பயணிக்காத சின்னச்சின்ன கிராமங்களிலும்கூட தொடர்ந்து பயணித்து வருகின்றனர். கொல்லிமலையில் மொத்தம் 14 நாடுகள் உள்ளன. கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் அங்குள்ள வாழவந்திநாடு, குண்டூர்நாடு, திண்ணூர்நாடு உள்ளிட்ட நான்கு நாடுகளில் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தினர். குண்டூர்நாடு கிராமத்திற்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், சுமார் 2 கி.மீ. தூரம் திமுகவினர் பாதசாரியாகவே  சென்றுள்ளனர்.

 

k


சமவெளிப்பகுதியைக் காட்டிலும் மலைவாழ் பழங்குடகளிடையே ஊராட்சி சபைக்கூட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் சராசரியாக 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றதை தேர்தல் பொறுப்பாளர்களேகூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள், நாமக்கல் மாவட்ட திமுகவினர். குறிப்பாக, பழங்குடியின பெண்கள் பலர் ஆர்வத்துடன் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

 


குண்டூர்நாடு கிராமத்தில் நடந்த கூட்டத்தில், 'எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கூட்டத்தினரைப் பார்த்து எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்து எழுந்து பேசிய ஒரு பெண், 'பழனிசாமி ரொம்ப கெட்டவருங்க... கொள்ளை அடிக்கிறாருங்க' என்றார் தடாலடியாக. உடனே பார்த்திபன், 'எந்த பழனிசாமினு ஊர் பேரோட சேர்த்து சொல்லுங்கம்மா... இல்லேனா எங்களோட வந்த பழனிசாமிய சொல்றதா தப்பா நினைச்சுக்கப் போறாங்க' என்று ஜனரஞ்சகமாக பேசியதை, பலரும் ரசித்துக் கேட்டனர்.

 


தொடர்ந்து பேசிய அந்தப்பெண்மணி, 'அம்மாவை சசிகலா, எடப்பாடி பழனிசாமி எல்லாரும் சேர்ந்துதாங்க கொன்னுப்புட்டாங்க,' என்றார். மலைவாழ் மக்கள் வரை இதுபோன்ற தகவல்கள் சென்று சேர்ந்திருப்பதை திமுகவினரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டனர்.

 

k

 

மற்றொரு பெண்மணி பேசுகையில், ''எங்க ஊர்ல ரேஷன் கடையில இலவசமா அரிசி போடுறாங்கய்யா. ஆனா காலாவதியான சோப்பு, எண்ணெய், மளிகை சாமான்கள்னு 250 ரூபாய்க்கு எங்க தலையில கட்டிடறாங்கய்யா. இங்க எல்லாருமே வறுமைக்கோட்டுக்குக் கீழதான் வாழறோம். ஒருபக்கம் இலவச அரிசி கொடுத்துட்டு, இன்னொரு பக்கம் பணத்தை பிடுங்கிக்கிறாங்கய்யா....'' என்றார். 


வேறு ஒரு இடத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், திமுக பொறுப்பாளர்கள், 'ஆதரிப்போம் ஆதரிப்போம் அண்ணன் தளபதியை ஆதரிப்போம்' என்றும், 'வாக்களிப்போம் வாக்களிப்போம் அண்ணன் தளபதிக்கு வாக்களிப்போம்' என்றும், 'தூக்கி எறிவோம் தூக்கி எறிவோம் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவோம்' என்று முழ க்கமிட்டு, மக்களையும் முழக்கமிடச் செய்யும் நூதன உத்தியைக் கையாண்டனர்.


பொங்கலூர் பழனிசாமி பெரும்பாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை குறித்து பேசினார். எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் விமர்சித்துப் பேசினார். ஒவ்வொரு ஊராட்சி சபைக்கூட்டத்திலும் அ ந்தப்பகுதியில் பிரபலமான நபர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்தும் கவுரவிக்கின்றனர்.


சமவெளி பகுதிகளைக் காட்டிலும், கொல்லிமலை பழங்குடி மக்களிடையே ஊராட்சி சபைக்கூட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சார்ந்த செய்திகள்