திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், துறையூர் நகரக் கழக செயலாளர் அமைதி பாலு ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் திருச்சி, துறையூர், பாலக்கரை பகுதியில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், அமைப்பு செயலாளர் நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி, திரைப்பட இயக்குநர் பவித்ரன், தஞ்சை மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த 11 ஆண்டு காலம் தமிழகத்தின் பொற்காலம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் கொண்டு வந்த தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய மடிக்கணினி போன்ற மக்களுக்கு பயன்படும் முத்தான திட்டங்களை திமுக அரசு தற்போது நிறுத்திவிட்டது. மேலும், நம் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளியில் பயின்றதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்காக 7.5% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார். இதனால் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவிகள் சுமார் 500 நபர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
திமுக, வருகின்ற, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான், கடந்த 27 மாதங்களுக்குப் பிறகு குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், அதில் ஒரு கோடியே 10 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு ரூபாய் ஆயிரம் 30 சதவீத குடும்ப அட்டைகளுக்கு வழங்கவில்லை.
திமுக வீர வசனமாக தேர்தல் அறிக்கை கொடுத்துவிட்டு இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளாகவே மின் கட்டணத்தை 52% உயர்த்தி விட்டனர். வீட்டு வரி 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் ஏற்றிவிட்டனர். கடைகளுக்கு 150 சதவீதம் வரை வரி விகிதம் உயர்ந்து உள்ளது. குடிநீர் முதல் குப்பை வரி வரை உயர்ந்து இருக்கிறது. இதனால் மக்கள் அன்றாடம் கஷ்டப்படுகின்றனர். இந்த திமுக ஆட்சிக்கு வாக்களித்துவிட்டு தினந்தோறும் ஒவ்வொரு விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுப்பதாகச் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் செலவாகிறது என்று அர்த்தம். இதெல்லாம் சிந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் ஒருபுறம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் வேலை வாய்ப்பு கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று கூறிவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மொத்தமே மூன்று லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை எப்படி எல்லாம் திமுக பொய் பேசி தங்களது ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆட்சியில் கலைஞர் போலவே அவரது மகனும் பொய்யான வாக்குறுதி கொடுப்பதிலே மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். அதில் ஏமாந்து தான் இந்த முறை மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் எப்போது தேர்தல் வரும் அதிமுக ஆட்சி எப்போது அமையும் எடப்பாடி எப்போது முதலமைச்சராக வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டு இருக்கும் திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர் வீட்டில் வேலை செய்த ஒரு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அவரை நயவஞ்சகமாக அழைத்து வந்து மருத்துவராக படிக்க வைப்போம் என்று கூறி அந்த பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணிற்காக எடப்பாடி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் காலை ஐந்து மணிக்கு வாசலில் கோலம் போடச் சென்றால் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பறிக்கும் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் சந்தி சிரிக்கிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் இறந்தால் மூன்று லட்ச ரூபாய் என்ற வினோதமான திட்டத்தை இந்தியாவில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இருக்கிறது. இப்படி பொய்யான ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி மலர வேண்டும். ஏனென்றால் 23 நாட்கள் காவேரி குழுவிற்காக நாடாளுமன்றத்தை முடக்கி தமிழகத்தில் உரிமையை பெற்று தந்தவர் எடப்பாடி” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அண்ணாவி, பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், செல்வராஜ், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், புறநகர் வடக்கு மாவட்ட கழக மாணவரணி செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.