கர்நாடகா மாநிலம் நந்திதுர்க்க மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டம், பெங்களுரூ மாவட்டங்கள் வழியாக 110 கி.மீ பயணித்து தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக உள்நுழைந்து, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் என 5 மாவட்டங்களில் 320 கி.மீ பயணித்து வங்காளவரிகுடாவில் கலக்கிறது.
வடதமிழகத்தில் உள்ள இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் விவசாய நிலங்கள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் நதியாக இந்த தென்பெண்ணையாறு உள்ளது. இந்த தென்பெண்ணையாற்றில் இருந்து 21க்கும் அதிகமான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு நீர் எடுக்கப்படுகிறது.
தென்பெண்ணையாற்றுக்கு நீர் வழங்கும் கிளை நதியான மார்கண்டேயா நதியில் கர்நாடகா அரசு, 50 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலத்தில் அணை கட்ட 2012ல் முடிவு செய்தது. இதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கியிருந்தது. இதனை அப்போதே திமுக கண்டித்து தென்பெண்ணையாற்றை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனச்சொல்லி, கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்மென தமிழகரசை வலியுறுத்தின விவசாய சங்கங்களும், திமுக உட்பட சில எதிர்கட்சிகளும்.
அதன்பின்பே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது தமிழகரசு. இந்த வழக்கை தான் கடந்த வாரம் அந்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடகா அரசு அணைக்கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அதோடு, இந்த வழக்கில் தமிழகரசின் மெத்தன போக்கையும் கண்டித்துயிருந்தது.
இந்த விகாரத்தில் தமிழகரசை கண்டித்து நவம்பர் 21ந்தேதி பாதிக்கப்படும் 5 மாவட்டங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துயிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன்படி, திருவண்ணாமலையில் 21ந்தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், வழக்கு நடத்த வக்கற்ற அரசே என தமிழகரசை கோஷங்களால் விளாசினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தெற்கு மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, "தென்பெண்ணையாற்றில் கடைமடை விவசாயிகளான நமக்கு தான் அதிக உரிமையுள்ளது. அது மட்டும்மல்லாமல் மெட்ராஸ் ஸ்டேட்க்கும் – மைசூர் அரசுக்கும் இடையே உருவான ஒப்பந்தமும் உள்ளது. அதனை மீறியே கர்நாடகா தென்பெண்ணையில் அணை கட்டுகிறது.
ஆனால், மத்தியரசையும், உச்சநீதிமன்றத்தையும் கர்நாடகா அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. குடிநீருக்காக இந்த அணையை கட்டுகிறோம் என பொய்ச்சொல்லியுள்ளது. அது பொய்யென வாதங்களை எடுத்து வைக்க வேண்டிய தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் அப்படி செய்யவில்லை. தீர்ப்பாயத்தில் முறையிட சொல்கிறது. தீர்ப்பாயம் என்பது ஒருவிவகாரத்தை நீர்த்து போகச்செய்ய வைப்பது. அதனால், உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென தமிழகரசு சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போது கட்டப்படும் அணை மற்றும் வேறு எந்த அணைகளும் கட்டப்படாத வண்ணம் தடுக்க வேண்டும்" என்றார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.