கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவரும், ஆண் செவிலியரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மருத்துவராக ரவிச்சந்திரன் (50) என்பவர் பனியாற்றிவருகிறார். இவர் காலை குழந்தைகள் நலப்பிரிவுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அந்த பிரிவிலிருந்து ஆண் செவிலியர் முகமதுபாரூக்(50) என்பவர் வெளியே வந்துள்ளார்.
அப்போது, செவிலியரிடம் "உன்னை யார் இங்கே வரச்சொன்னது, உனக்கு என்ன வேலை" என மருத்துவர் கேட்டுள்ளார். இதற்கு முகமதுபாரூக்கும் பதில் அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவருக்கும் முகம் வீங்கியது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி மருத்துவமனை கண்காணிப்பாளர் சாம்பசிவத்திடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் காலை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்த மருத்துவர்கள், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை ஒரு மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பின்னர் சாம்பசிவத்திடம் முறையிட்டனர். அதற்கு கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடர்ந்தனர்.
இந்த சம்பவத்தால் நேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் மருத்துவர்கள் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதே போல் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முன்னால், இரண்டு அரசு மருத்துவர்கள் அடித்துக்கொண்டு, கட்டிப்புறண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அந்த சம்பவம் நடந்து பதினைந்தாவது மணியில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைகளில், மருத்துவர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் தலைகுனியவைத்துள்ளது.