கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அங்குள்ள வளாகத்திலேயே சேமித்து வைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவை வளாகத்திற்குள்ளேயே சேமிக்கும் வசதியை ஏற்படுத்த இந்திய அணுசக்திக் கழகத்திற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வக்கிழங்கியுள்ளது. ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளின் எரிபொருள் கழிவுகளை சேமித்து வைக்க வளாகத்திற்கு உள்ளேயே உருவாக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை.
அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுகளை வளாகத்திற்கு உள்ளேயே சேமித்து வைப்பது என்பது அப்பகுதி மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். அணுக்கழிவுகளை அகற்ற பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆழ்நிலை அணுக்கழிவு மையத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்ட ஆய்வில் அணுக்கழிவை வளாகத்திற்குள் சேமிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. எனவே, அணுக்கழிவுகளை வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்கும் முடிவை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.