நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). நெல்லை கிழக்கு மாவட்டத்தின் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பில் இருப்பவர், இந்தக் கிராமத்தின் அருகிலுள்ள பத்தல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையின் உறவினரான ஐயப்பன் (வயது 45). இவருக்கும், செல்லத்துரைக்குமிடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்பகை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், செல்லத்துரை தான் வெளியேபோகும் போது தனக்குப் பாதுகாப்பாகச் சிலரை அழைத்துச் செல்வாராம்.
இந்த நிலையில் நேற்று (18/02/2021) இரவு செல்லத்துரை தன் ஊருக்கு வெளியே உள்ள தனது கோழிப்பண்ணை தோட்டத்தைப் பார்ப்பதற்காகத் தன் பைக்கில் தனியாகச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வேவு பார்த்தவர், அன்றைய தினம் செல்லத்துரை தனியே செல்வதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அங்கு பதுங்கியிருந்துள்ளனர். பின்னர், நொடியில் செல்லத்துரையின் பின் பக்கமாக வந்து, அவரது கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் சரமாரியாக வெட்ட, நிலை குலைந்த செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்திருக்கிறார்.
இது குறித்த தகவலறிந்த செல்லத்துரையின் உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்.பி.மணிவண்ணன், சேரன்மாதேவி ஏ.எஸ்.பி.பிரதீப் ஆகியோர் செல்லத்துரையின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய எஸ்.பி.மணிவண்ணன் பதற்றத்தைத் தணிக்க போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முக்கூடல் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சிரனைத் தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரியவர, தலைமறைவாகியிருக்கும் ஐயப்பனைத் தேடி வருகின்றனர்.முன்னதாக தகவலறிந்து முக்கூடல் மருத்துவமனைக்கு வந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதை செல்லத்துரையின் உடலைப் பார்த்துக் கண்கலங்கினார்.
கொலையான செல்லத்துரைக்கு பிரேமா என்ற மனைவியும், ஊர்மிளா, ஐயப்பன் என்ற இரண்டு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.