திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பணமோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில், மீண்டும் விசாரணை நடத்தி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2015- ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பலரிடம் பண மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
கடந்த 2015- ஆம் ஆண்டு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான அருண் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,‘அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி மோசடி செய்த விவகாரத்தில், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி விசாரணை நடைபெறவில்லை எனவும், எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில், முறைகேட்டில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரிடம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகளின் பண மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஆவணங்கள் உள்ளதாலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எஸ் ரமேஷ், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 6 மாத காலத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.