மத்திய அரசுக்கு கிம்பளம் கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரியம் சாதித்து வருகிறார் என்று தயாநிதி மாறன் எம்.பி., கூறினார். சேலத்தில் நடந்த தி.மு.க. பரப்புரை கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பரப்புரை பயணம் திங்கள்கிழமை (டிச. 21) நடந்தது. தயாநிதி மாறன் எம்.பி. இதில் பரப்புரை செய்தார்.
இதற்காக அவர், சென்னையிலிருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமானநிலையத்திற்கு திங்களன்று காலை வந்தடைந்தார். அவருக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வகணபதி (மேற்கு), சிவலிங்கம் (கிழக்கு), பார்த்திபன் எம்.பி., தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர், மாவட்ட கட்சி அலுவலகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீரபாண்டி ஆறுமுகம், ராஜாஜி, பெரியார், அண்ணா, காந்தி, காமராஜர், விஜயராகவாச்சாரியார், அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து கட்டிடத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். கட்டுமான பொருள்கள் விலையேற்றம், எம்.சாண்ட் மோசடி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கட்டுமான தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தொழிலாளர்கள் கூறினர்.
இக்கூட்டத்தில், தயாநிதி மாறன் எம்.பி. பேசியதாவது: "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பொருளில் இங்கு பரப்புரை தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஊழல்வாதிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கி, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என தமிழகமே இருண்டு கிடக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை அவர் மீதான ஊழல் புகார்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவருக்குப் பின்னர் வந்த இவர்கள், ஊழலே கதி என கிடக்கிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியிட வேண்டும் என 4 வருடத்திற்கு முன்பு தியானம் இருந்தவர் இப்போது என்ன செய்கிறார்? உருண்டு, நெளிந்து, வளைந்து வருபவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பரிசு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறத் தகுதியான ஒரே நபர் எடப்பாடி பழனிசாமிதான்.
உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் அவர், வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைத்துவிட்டார். ஆனால் இன்று, இறைவன் கொடுத்த வரம் என்கிறார். கட்டுமான தொழிலில் உள்ள கஷ்டங்கள் பற்றி இங்கு கூறினீர்கள். கட்டுமானம் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் முதல்வரின் உறவினர்களே ஒப்பந்தம் எடுத்துச் செய்கிறார்கள்.
இதுபற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டால், சொந்தக்காரர்கள் செய்தால் நான் என்ன செய்வது என்கிறார். இவர் மத்திய அரசுக்கு கிம்பளம் கொடுத்து காரியம் சாதிக்கிறார். இந்திரா காந்தியிடம் போராடி கலைஞர் பெற்ற இரும்பாலையைத் தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி தலைமையிலான அரசு, நமது உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டது. அடிமட்டத்தில் இருப்பவர்களைக் கேட்டால் வருமானம் மேலிடத்திற்குப் போகிறது என்கிறார்கள். அந்த மேலிடம் எடப்பாடி பழனிசாமிதான்.
தமிழ்நாட்டில் இல்லாத கட்சி, பாஜக. அந்தக் கட்சியின் மிரட்டலுக்கே இவர் பயப்படுகிறார். அடுத்து வரும் நான்கு மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரு நாள்களுக்கு முன்பு எடப்பாடியைச் சேர்ந்த பென்ஷனர்கள் பென்ஷன் கிடைக்கவில்லை எனப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அடிக்கடி சேலம் வரும் எடப்பாடி பழனிசாமி, சொந்த தொகுதி மக்களையே கண்டுகொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.
விவசாயத்திற்கு அடுத்து கட்டுமான தொழில்தான் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. ஊருக்கெல்லாம் வீடு கட்டித்தரும் உங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பது வேதனை. கட்டிடத் தொழிலாளர்களுக்காக வாரியம் அமைத்தது தி.மு.க. அரசு. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று ஒரே இரவில் நம்மை நடு சாலையில் நிற்க வைத்தார் மோடி. ஜிஎஸ்டியிலும் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. அனைத்திற்கும் ஒரே வரி என்றால் பெட்ரோலுக்கு மட்டும் வரி வேறுபடுவது ஏன்?
மக்கள் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப்போட்டார்கள். ஆனால், ஓட்டுப்போடாத இருவர் நம்மை ஆட்சி செய்கிறார்கள். அவர்களால் இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க ஸ்டாலினை முதல்வராக்குவோம்." இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.