கோயில் பூஜையில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பாவூர் கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஒரு வடத்திற்கு முன்னர் இதே நாளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒராண்டு நிறைவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் கோயிலுக்கு வந்த கிராம மக்களுக்கு சக்கரை பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதை வாங்கி சாப்பிட்ட கிராம மக்கள் பலருக்கும் காய்ச்சல், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அனைவரது வீட்டிலும் இதே நிலை நீடிக்க சத்யா, அருண்குமார், சோபனா, பிரவீனா, ஹேமலதா போன்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து அதம்பாவூர் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோயில் பிரசாதம் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் மூலமாக நோய் பரவியுள்ளதா என்ற கோணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள குடிநீரை பரிசோதனைக்காக நாகப்பட்டினம் கொண்டு சென்றுள்ளனர். கிராமத்தில் உள்ள பலருக்கும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அதம்பாவூர் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.