Skip to main content

பொதுமக்களுடன் இணைந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

DMK MLA involved in a sudden scuffle with the public

 

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதி, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்தை சந்தித்துவந்தனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுமார் 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் அந்தப் பகுதியில் ஆய்வுக்காகச் சென்றபோது அங்குள்ள பெண்கள் இது தொடர்பாக முறையிட்டனர். அவரும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

ஆனால் நேற்று (07.10.2021) வழக்கம் போல் அந்த டாஸ்மாக் கடையில் லாரியில் வந்த மதுபான பெட்டிகளைக் கடைக்குள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உடனே அங்கு மக்கள் திரண்டதால் உடனே அந்த இடத்திற்கு எம்.எல்.ஏ செல்வரஜும் நேரடியாக வந்தார். அவர் மதுபான பெட்டிகளை இறக்குவதை நிறுத்தச் சொன்னதால் அந்த லாரியும் மதுபான பெட்டிகளை இறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, கடையை மாற்ற தங்களுக்கு உத்தரவு இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு முன்பு நாற்காலி போட்டு அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏ, கடையை முழுவதுமாக காலி செய்த பின்னரே தான் அந்த இடத்திலிருந்து செல்லப்போவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பாரையும் காலி செய்ய கூறியதன் பேரில் உடனடியாக அனைத்து சாமான்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மேலும், கலால் உதவி ஆணையாளர் சுகுமார், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்பும் எம்.எல்.ஏ அங்கிருந்து புறப்பட மறுத்ததால் மதியம் ஒன்றரை மணியளவில் டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் கோவிந்தராஜுலு அங்கு வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், லாரியைக் கொண்டுவந்து கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகள் லாரியில் ஏற்றப்பட்டன.

 

இந்நிலையில், 10 ஆண்டு கால போராட்டத்துக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், “இது போராட்டமல்ல, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது” என்றார். இதுகுறித்து மண்டல மேலாளர் கோவிந்தராஜுலு கூறும்போது, “கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். “கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்கள் அனைத்தையும் ஏற்றி கடையை மூடிய பிறகு மாலை ஐந்து மணி அளவில் செல்வராஜ் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டார். சுமார் ஆறரை மணி நேரத்துக்கும் மேலாக எம்.எல்.ஏ. அங்கு காத்திருந்தார்” என கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்