சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் அடுத்து அமையவுள்ள ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்பதைக் கூறிக்கொள்கிறேன். நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்; நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும். உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்தினால் தான் முழுமையான வெற்றியை பெற முடியும். நாம்தான் வெல்லப் போகிறோம்; ஆனால் அந்த வெற்றியை எளிதாக பெற விட மாட்டார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியன் தான் வேட்பாளர்; கருணாநிதிதான் வேட்பாளர் என மனதில் கொள்ளுங்கள். தனி நபர்கள் வெற்றிப் பெற வேண்டும் என நினைக்காதீர்கள்; தி.மு.க. வெற்றிப் பெற வேண்டும் என நினைக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஐந்து முறை வெற்றிப் பெற்றதற்கு சமம். பா.ஜ.க. ஆட்சியின் அதிகார பலம், அ.தி.மு.க. ஆட்சியின் பண பலத்தைத் தாண்டி நாம் வெற்றிப் பெற வேண்டும். நாம் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சிலரைக் கட்டாயப்படுத்திக் கட்சித் தொடங்க வைக்கிறார்கள். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். மும்முனை தாக்குதலில் நாம் மாட்டிக்கொண்டாலும் நாம் ஆறாவது முறையாக வெற்றிப் பெற வேண்டும்.
அர்ஜுனன் வைத்த குறி தப்பாது என்பது போல் தி.மு.க. வைத்த குறி தவறாது என நிரூபிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்பதே தி.மு.க.வினர் அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை, சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும். அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். 1971, 1996 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை போல வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும். 2004, 2019- ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை வரும் தேர்தலில் சாத்தியப்படுத்த வேண்டும்.
தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களைக் கட்சியினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணமா? மக்கள் மனமா? என்ற நிலையில் மக்கள் மனதை மாற்றி வெல்ல வேண்டும். கிராம சபை கூட்டங்கள் முடிந்த பிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் தி.மு.க. செய்யும் நலப்பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். கரோனா காலத்திலும் மக்களுக்காக செய்துள்ளப் பணிகளை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையைத் தொடங்கவுள்ளேன். 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிப் பெற வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வரவுள்ளதாகவும் ஒரு தகவல் வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்ற வேண்டும்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.