சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும் தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.