நாமக்கல் அருகே, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரை வழிமறித்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (41). வழக்கறிஞர். இவர் அலுவல் தொடர்பாக நவ. 3ம் தேதி நாமக்கல் சென்று இருந்தார். பணிகளை முடித்துவிட்டு, அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணியளவில் செல்லிப்பாளையம் ஏரிக்கரை அருகே உள்ள கஸ்தூரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை வழிமறித்துள்ளனர்.
அவர்களைப் பார்த்து கலக்கம் அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து வேகமாக தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின்னரே கொலைகார கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த எருமைப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பி தனராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எருமைப்பட்டி காவல் ஆய்வாளர் சுமதி, எஸ்ஐ பாலமுருகன் மற்றும் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட மணிகண்டன் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி, திமுகவில் இணைந்து கொண்டார். கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா?, பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
மணிகண்டனுக்கு ஸ்வேதா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது ஸ்வேதா, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.