Skip to main content

நெல்லையில் கொலைவெறித் தாக்குதலான தி.மு.க உட்கட்சிப் பூசல்...  2 பேர் கைது!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

​    ​nellai

 

நெல்லை மாநகரின் சந்திப்பு பகுதியிலுள்ள 5 மற்றும் 6 ஆவது வார்டுகளைக் கொண்ட மீனாட்சிபுரம் ஏரியாவிலிருப்பவர் மாரியப்பன். நகரில் கேபிள் டி.வி நடத்தும் இவர், நெல்லை மாநகர மாவட்ட தி.மு.க.வின் கலை இலக்கியப் பிரிவின் துணை அமைப்பாளராகவும் இருப்பவர்.

கட்சி தொடர்பான பணிகள் மற்றும் அவரது வார்டுகளில் நலத்திட்டம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் தன் சொந்தச் செலவில் மாநகர தி.மு.க மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பை வரவழைத்து நடத்தியிருக்கிறார். அதன் மூலம் அவரது வார்டுகளில் பிரபலமாகியுள்ளார். தவிர, உள்ளாட்சித் தேர்தலில் அவர் அந்த வார்டு சார்பில் போட்டியிடும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறார்.

 

dmk incident in nellai


இதேபகுதியில் வசிக்கும் தி.மு.க.வின் பகுதி செயலாளரும் முன்னாள் தச்சை மண்டலச் சேர்மனுமான சுப்பிரமணியன் இவர் மீது அதிருப்தியிலிருந்திருக்கிறார். பகுதிச் செயலாளரான தன்னைக் கேட்காமல் ஏரியாவில் கட்சி நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று சொன்னதால், அவர்களுக்குள் பிரச்சினை மூண்டிருக்கிறதாம். இதனிடையே மாரியப்பன் செப்.,11 அன்று வேலை நிமித்தமாக போய்க் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்த மர்ம நபர், இரும்பு ராடால் மாரியப்பனின் தலையில் தாக்க, அதில் அவர் படுகாயமடைந்திருக்கிறார். உடனடியாக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாரியப்பன் தாக்குதலுக்குக் காரணமான சுப்பிரமணியன் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் தி.மு.க பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் இருவர் உட்பட 3 பேர் மீது 307 உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படுகாயமடைந்த மாரியப்பன் ஜி.ஹெச்சிலிருந்து தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி தற்போது உடல் நலம் தேறியுள்ளாராம்.

மாரியப்பனின் புகார் மீதான நடவடிக்கையாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சுப்பிரமணியன் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. உட்கட்சி விவகாரத்தால் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம், நெல்லை மாநகர தி.மு.க.வில் பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்