திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி குட்டத்துப்பட்டியில் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். சுமார் 800 மாணவ, மாணவியர் படித்து வரும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் பங்குத்தந்தை ஜான் நெப்போலியன், கிராம மக்கள் மற்றும் பள்ளி சார்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தான் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பங்குத்தந்தை ஜான் நெப்போலியன் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாசெல்வி, ஆரோக்கியமேரி, ஊராட்சிமன்றத் தலைவர் வேல்கனி, ஹரிசந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்று பேசினார்.
விழாவில் புதிய வகுப்பறையை திறந்து வைத்துவிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “மாணவ, மாணவியர்களின் பொற்காலமாக திராவிடமாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சிறபான்மையின மக்களின் பாதுகாவலராக செயல்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த நமது முதல்வர் சிறுபான்மையின மக்களின் நலன் காப்பதில் அதிக அக்கறைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். ஆத்தூர் தொகுதியில் சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற கல்வியாளர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களின் கல்வி சேவையை பாராட்டுகிறேன்.
குறிப்பாக ஆத்தூர் தொகுதியில் அரசு பள்ளி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளான சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி பள்ளிகளின் வளர்ச்சிக்கு எண்ணற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நூற்றுகணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் இருக்கிறீர்கள் நீங்கள் பள்ளி படிப்பு முடிந்தவுடன் பட்டப்படிப்பு படிப்பதற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திலும், ஆத்தூர் ஒன்றியத்திலும் அரசால் நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் மூலம் எவ்வித சிரமமின்றி உயர்க் கல்வி கற்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு உயர்க் கல்வி கற்க வேண்டும்.
தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் முதல் குரல் கொடுக்கும் இயக்கும் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் சிறுபான்மையின மக்கள் இன்றுவரை திமுக அரசுக்கு உறுதுணையாக உள்ளார்கள். இப்போது கூட அருகில் உள்ள பள்ளிக்கு மேற்கூரை சீரமைக்க மற்றும் கூடுதல் கழிப்பறைகள், சுற்றுச்சுவர் வேண்டுமென கோரிக்கை மனுகொடுத்துள்ளார்கள் அவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.