கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. திமுக கவுன்சிலர்கள், 3 தமிழக வாழ்வுரிமைக் கட்சி கவுன்சிலர்கள் உட்பட்ட 30 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் 3 பேர், சுயேட்சை 3 பேர், பாமக 1 கவுன்சிலர், பாஜக 1 கவுன்சிலர், காங்கிரஸ் 1 கவுன்சிலர் உள்ளனர். கடலூர் மாநகராட்சி மேயராகத் திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜாவும், துணை மேயராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாமரைச்செல்வனும் இருந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் செப் 27 ஆம் தேதி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 21 பேர் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டியின்றி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 திமுக கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவைப் பெற்றுக் கொண்டார். பின்னர் மேயர், திமுக தலைமை மற்றும் மாவட்டச் செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கி புகார் மனு அளித்திருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, “நான் பதவியேற்று 1 ஆண்டுக்கு மேல் ஆகிறது. எனக்குத் தனியாக கார் வசதி உண்டு. ஆனால் மேயர் எனக்குக் கார் வழங்க மறுத்து வருகிறார். இதுகுறித்து நான் அரசு கார் கேட்டு ஆதங்கமாகப் பேசினேன். மேலும் துணை மேயருக்கு அனைத்து வார்டுகளிலும் நடக்கும் பணிகள் குறித்து கேட்க உரிமை உள்ளது. இந்த புரிதல் இல்லாமலும் நான் கார் கேட்டேன் என்ற காரணத்தால் இதுபோன்று செயல்படுகிறார்கள். விசிக சார்பில் உயர் பதவியில் இருந்தால் அரசு காரில் செல்லக்கூடாதா? இந்தக் கூட்டணிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி, குறிஞ்சிபாடி, கடலூர் தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வெற்றியடைய செய்தேன். இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட அமைச்சர், எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்.” என்றார்.