தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதே சமயம் இந்த 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நாளை (16.10.2024) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.