
தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், ''புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்களுக்கு தேமுதிக சார்பில் நாளை (24.05.2020) பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்படும். வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தாண்டு கெரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்தார் நோன்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு நம்மால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறோம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நாளையும், ரமலான் தினமான திங்களன்றும், இஸ்லாமிய மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நோன்பு கஞ்சி, காய்கறி, அரிசி, உள்ளிட்ட உணவு பொருட்கள், பண உதவி மற்றும் துணிகள் அந்தந்த மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் வழங்க வேண்டும். ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கும்போது கண்டிப்பாக முகக் கவசங்களை அணியும் படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தேமுதிகவினர் வலியுறுத்த வேண்டும்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் 24.05.2020 மாலை 5 மணிக்கு பொருளாளர் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.