தலைவாசல் அருகே, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த தேமுதிக பிரமுகரை நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (40). விவசாயி. சில ஆண்டுகள் தேமுதிக கிளைச்செயலாளர் பொறுப்பிலும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (30) இவர்களுக்கு ராம்குமார் (16), அருண்குமார் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17, 2018) இரவு ஆலயமணி, தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்கு பஸ்சில் கிளம்பிச் சென்றார். அவர்களை வழியனுப்பி வைத்த கலியமூர்த்தி, அன்று இரவு வீட்டில் தனியாக படுத்துக் தூங்கினார்.

மறுநாள் (ஆகஸ்ட் 18, 2018) காலையில் நீண்ட நேரமாகியும் அவருடைய வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அவருடைய வீடு அருகே வசித்து வரும் சித்தப்பா சந்தேகத்தின்பேரில் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவு உள்பக்கம் தாழிடாமல் திறந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கே கலியமூர்த்தி, பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கலியமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளது. தலை, கழுத்து, மார்பு, கைகள், வயிறு என முப்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், நிகழ்விடத்தில் இருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. நோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியதிலும், தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே திருநள்ளாறுக்குச் சென்ற ஆலயமணியும், அவருடைய மகன்களும் வீடு திரும்பினர். ஆலயமணியிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆலயமணி அடிக்கடி கோல்களுக்குச் சென்று வந்துள்ளார். எப்போதும் தனியாகவே சென்றுவிட்டு வீடு திரும்பும் அவர், நேற்று முன்தினம் இரவு தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்குச் சென்றது போலீசாரை யோசிக்க வைத்துள்ளது. சில ஆண்டுக்கு முன்பு, திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆலயமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலைபார்க்கும் குமார் என்ற வாலிபருடன் ஆலயமணிக்கு தொடர்பு ஏற்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
வீட்டில் கலியமூர்த்தி இல்லாதபோது குமாரை தன் வீட்டிற்கே வரவழைத்து அவருடன் ஆலயமணி நெருக்கமாக இருந்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலியமூர்த்தி கொலை செய்யப்பட்ட அன்றும், அதற்கு சில நாள்கள் முன்பும் அவர் குமார் மற்றும் சிலருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆலயமணியும், கள்ளக்காதலன் குமாரும் சேர்ந்து கூலிப்படையினர் மூலம் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமார் மற்றும் சந்தேகத்திற்குரிய மேலும் சிலரையும் நேரில் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கொலையுண்ட கலியமூர்த்திக்கு யாருடனாவது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளதா? சொத்துப்பிரச்னை தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளதா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.