கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு சாட்சி விசாரணையின்போது, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயில் ஊழியர் நாமக்கல் நீதிமன்றத்தில் இன்று (22.10.2018) பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர், சித்ரா. இவருடைய இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தார். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தினர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் அப்போது பரவியது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.எச். இளவழகன் முன்னிலையில் ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில், சொத்துத் தகராறில் கொலையுண்ட ஜோதிமணி, தலைமறைவாகிவிட்ட அமுதரசு தவிர, மற்ற 15 பேரும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
கடைசியாக அக்டோபர் 1, 2018ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. தசரா விடுமுறைக்குப் பின்னர் இன்று (அக்டோபர் 22, 2018) சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும்படி பதினைந்துக்கும் மேற்பட்ட சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் குற்றவாளியான யுவராஜ், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. அம்மாவட்டத்தில் முதல்வர் நிகழ்ச்சிகள் இருந்ததால், எஸ்கார்ட் போலீசார் பற்றாக்குறை காரணமாக யுவராஜ் அழைத்து வரப்படவில்லை என்று சொல்லப்பட்டது.
இதனால், இன்று மதியம் 2.30 மணிக்குதான் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. அரசுத்தரப்பில் முதல் சாட்சியாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தாசன் என்கிற முருகேசன் அழைக்கப்பட்டார். 23.6.2018ம் தேதியன்று, சேலம் மாவட்டம் ஒருக்காமலை பகுதியில் கோகுல்ராஜை ஒரு காரில் யுவராஜ் உள்ளிட்ட கும்பல் அழைத்துச் செல்வதை கண்ணால் பார்த்து இருந்ததாக சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் முன்பு கூறியிருந்தார்.
ஆனால், இன்றைக்கு சாட்சியம் அளித்தபோது, யுவராஜ் உள்ளிட்ட யாரையும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்றும், அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிடுவதுபோல மேற்கண்ட தேதியில் எந்த சம்பவத்தையும் பார்க்கவில்லை என்றும் பல்டி சாட்சியம் அளித்தார்.
முருகேசன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்தமாக ஒரு லாரி வாங்கியிருந்தார். யுவராஜ் தரப்பினர் உதவியதால்தான் அந்த லாரி வாங்கப்பட்டதாகவும, அதனால்தான் பிறழ் சாட்சியம் அளிப்பதாகவும் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கூறினார். அதற்கு முருகேசன், அப்படி இல்லை என்று பதில் அளித்தார்.
இதையடுத்து, கோகுல்ராஜ் பொறியியல் படிப்பு படித்து வந்த திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் பெரியசாமி சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார்.
மேற்கண்ட கல்லூரியில் படித்ததற்கான சான்றிதழ் பெறப்பட்டபோது கோகுல்ராஜ், அவருடைய தோழி சுவாதி, சக மாணவர் கார்த்திக்ராஜா ஆகியோரின் புகைப்படம் ஒட்டப்பட்ட ஆவணத்தைக் காட்டி, புகைப்படங்களில் உள்ளவர்களின் பெயர்களை அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து அவரிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.
அதன்பிறகு, மூன்றாவது சாட்சியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் டிக்கெட் வழங்கும் ஊழியராக பணியாற்றி வரும் தங்கவேல் என்பவர் அழைக்கப்பட்டார்.
அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர், கூண்டில் நின்ற குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காட்டி, இங்கே நிற்பவர்களை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். அதற்கு தங்கவேல், தெரியாது என பதில் அளித்தார். பின்னர், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் எத்தனை சிசிடிவி கேமராக்கள் உள்ளன? என்று கேட்டதற்கு, 8 கேமராக்கள் உள்ளதாக பதில் அளித்தார்.
பின்னர் அவர், கோயிலின் மேற்கு நுழைவாயில் ஒரு கேமரா, இரண்டாவது கேமரா செங்கோட்டுவேலர் சன்னதி முன்பும், மூன்றாவது கேமரா செங்கோட்டு வேலர் சன்னதிக்குள்ளும், நான்காவது கேமரா டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திலும், 5வது கேமரா சிறப்பு தரிசன வழியிலும், 6வது கேமரா இலவச தரிசனப்பாதையிலும், 7 மற்றும் 8வது கேமராக்கள் உண்டியல் வைக்கப்படும் இடத்திலும் பொருத்தப்பட்டு உள்ளதாக தெளிவாக சாட்சியம் அளித்தார்.
மேலும் அவர், 23.6.2018ம் தேதியன்று கோகுல்ராஜூம், சுவாதியும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குள் உலாவும் கேமரா-1 மற்றும் கேமரா - 5 ஆகிய இரண்டு கேமராக்களில் பதிவாகியிருந்த சில காட்சிகள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. கேமரா-1ல் வந்த ஒரு காட்சியைக் காட்டி, வீடியோவில் உள்ள அந்த இடம்தான் கோயிலின் மேற்குவாசல் பகுதி என்று சாட்சியம் அளித்தார். கேமரா - 5ல் வந்த ஒரு காட்சியைக் காட்டி, அந்த இடம் சிறப்பு தரிசன வழி எனக் குறிப்பிட்டார். இதன்பிறகு அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை நடத்தினார்.
பல இடங்களில் சாட்சியை மிரட்டும் தொனியில் அவர் பேசினார். சில கேள்விகளுக்கு தங்கவேல் நீண்ட விளக்கம் அளிக்க முயன்றதால், கொதிப்படைந்த வழக்கறிஞர் ஜிகே, ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லும்படி கட்டளையிட்டார். ஒருகட்டத்தில் ரொம்பவே கொதிப்படைந்த வழக்கறிஞர் ஜிகே, 'அப்புறம் எதுக்குய்யா சாட்சி சொல்ல வர்ற?' என்று, ஒருமையில் பேசினார்.
சாட்சிக் கூண்டில் நின்ற தங்கவேலின் மிக அருகில் சென்று அவரின் முகத்துக்கு நேராக கையை நீட்டி, வாய்யா, போய்யா என்றெல்லாம் பேசியதால் சாட்சி சற்றே நிலைகுலைந்தார். அதைப்பார்த்த நீதிபதி கே.ஹெச். இளவழகன் சிறப்பு வழக்கறிஞரை எச்சரித்தார். சில கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தாலும், பல கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து நான்காவது மற்றும் கடைசி சாட்சியாக அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் டிக்கெட் கொடுக்கும் ஊ-ழியராக உள்ள ஜெகநாதன் என்பவர் அழைக்கப்பட்டார். அவர், 23.6.2015ம் தேதியன்று மதியம 12.30 மணியளவில் வெள்ளை நிற டாடா சபாரி காரில், முகப்பில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார் கோயிலுக்கு வந்ததா? என்று கேட்டதற்கு, தெரியாது என பதில் அளித்து, பல்டி சாட்சியம் ஆனார்.
இவ்வாறு சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடந்தது. மாலை 4.45 மணிக்கு சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது. இதையடுத்து சாட்சிகள் விசாரணை வரும் அக்டோபர் 30, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.