![D.K. chief K. Veeramani himself accepted the truth for Khushboo on Sanatana Dharma](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sw3iUC-y9N3ZC0-pEqVVwQcX66FmrEBBAd3Zs_OYHKI/1693978808/sites/default/files/inline-images/kus-ni.jpg)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர், பா.ஜ.கவின் நடிகை குஷ்பு தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு இஸ்லாமிய சமூக பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். இருந்தாலும் எனக்காக இங்கு ஒரு கோவில் கட்டினார்கள். அது தான் சனாதன தர்மம். அனைத்தையும் ஒன்று என நினைத்து மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். திராவிடத் தலைவர் கி. வீரமணி கூட சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், தி.மு.க ஏன் அதை ஏற்க மறுக்கிறது?” என்று தெரிவித்துள்ளார்.