மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பலமுறை இந்த ஆணையத்தை காலநீட்டிப்பு செய்தது தமிழக அரசு. இந்த விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்த நிலையில் பலமுறை ஆணையத்தின் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (07/03/2022) மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
இந்நிலையில் விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன். ஆனால் தினமும் 16 மணிநேரம் வேலை இருப்பதாகக் கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். யார் துணையும் இல்லாமல் நடக்க முடியாத சூழல் ஜெயலலிதாவுக்கு இருந்ததாகவும், மருத்துவர் சிவகுமார் அழைப்பின் பேரில் போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன் எனவும் பாபு மனோகர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.