பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், செய்யாறில் 18 சென்டிமீட்டர், ஆவடியில் 17 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி, காட்டுக்குப்பத்தில் தலா 16 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் அயனாவரம், குன்றத்தூரில் தல 15 சென்டிமீட்டர் மழையும், அரக்கோணம், உத்திரமேரூர், பெரம்பூரில் தலா 14 சென்டிமீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், சோழவரம், பள்ளிப்பட்டில் தலா 13 சென்டிமீட்டர் மழையும், எம்ஜிஆர் நகர், ஆலந்தூர், ஊத்துக்கோட்டையில் தலா 12 சென்டிமீட்டர் மழையும், அம்பத்தூர், செங்குன்றத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.