அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்துவதற்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைதூர கல்வி மூலம் மூன்று ஆண்டு, இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (19/06/2021) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த உரிமையோ, அதிகாரமோ இல்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, கல்லூரிகளில் போதிய அளவில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா? தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு வழங்கப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியம் எனக் கூறி பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.